ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகள் இரண்டு வாரங்களில் வெகுவாக குறையும் என அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவில் தொடர்ந்து நோய் பாதிப்புகள் இருந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. தெலுங்கானாவில் பிரகதிபவனில் கொரோனா தொற்று குறித்த ஆலோசனை மறுஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில்ஐதராபாத் மற்றும் மாநிலத்தின் மற்ற முக்கிய பகுதிகளில் நோய் அதிகரிப்பது தொடர்பாகவும் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் கொரோனா பரவுவது மாநிலத்தின் வீழ்ச்சிக்கான அறிகுறிகளை காட்டுகிறது என்றும் அதிகாரிகள் முதல்வர் சந்திரசேகர ராவிடம் விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து முதல்வர் கூறியதாவது : தெலுங்கானாவில் கொரோனா வைரசின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. ஆயினும் ஊரடங்கு காலங்களில் மாநில அரசு நோய் தொற்றுக்கு எதிராக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தியது. மாநிலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தற்போது பலனளிப்பதை காண முடிகிறது. நேற்று (ஏப்.,22) மாநிலத்தில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து, ஊரடங்கை சிறப்பாக கடைபிடிப்பதன் மூலமும் நோய் பாதித்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்வதனாலும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுப்பதன் மூலமும் குறைந்து இரண்டு வாரங்களிலோ அல்லது விரைவாக நோய் தொற்று வெகுவாக குறையும் என எதிர்பார்க்கிறோம்.
மாநிலத்தில் நோய் தொற்றுக்கு ஆளான நபர்கள் பலர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதன் மூலம் பல மண்டலங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இதனால் நோய் பரவாமல் தடுக்கிறது. மக்களின் ஒத்துழைப்புடன், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் ஊரடங்கு திறம்பட செயல்படுத்தப்படுகிறது. இன்னும் சில நாட்களுக்கு நாங்கள் ஊரடங்கை கடுமையாக பின்பற்றினால், நாங்கள் எங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவோம். இவ்வாறு கூறினார்.