புதுடில்லி: கடந்த இரு வாரங்களில் சீனாவிலிருந்து சுமார் 400 டன் மருத்துவ உபகரணங்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: கொரோனா பரிசோதனைக்காக, அதிக தேவையுள்ள, 6 அதிவேக சோதனை மிஷின்கள், அமெரிக்காவின் சோச்சியிலிருந்து இந்தியா கொண்டுவரப்படும். நம் நாட்டிலுள்ள ஆர் அண்டி டி லேப்கள், இஸ்ரேல் மற்றும் ஜெர்மனியிலுள்ள லேப்களுடன், தொடர்பில் உள்ளது.
கடந்து இரண்டு வாரங்களில் சீனாவிலிருந்து சுமார் 400 டன் மருத்துவ உபகரங்களை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. சீனாவின் 5 நகரிலிருந்து, 24 விமானங்களில், கொரோனா ரேபிட் டெஸ்ட் கிட்ஸ், பிபிஇ கிட்ஸ், தெர்மாமீட்டர் உள்ளிட்ட 400 டன் மருத்துவ உபகரணங்கள் இந்தியா வந்துள்ளன.
வரும் நாட்களில் 20க்கும் அதிகமான விமானங்களில் மருத்துவ உபகரணங்கள் சீனாவிலிருந்து இந்தியா வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் கொள்முதல் மேலும் அதிகரிக்கப்படும் என்பதால், இந்த எண்ணிக்கை மேலும் உயரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.